கருப்பு பலூன் ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம்
வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோகனூர்
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
மோகனூர் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, ஆண்டாபுரம், அரூர் ஆகிய ஊராட்சி சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மோகனூர் பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சிப்காட் எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
நூதன போராட்டம்
இந்நிலையில், நேற்று காலை வளையப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு பலூன் ஏந்தி நூதன போராட்டதில் ஈடுபட்டனர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினாா்.
கொ.ம.தே.க. ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் ஒன்றிய செயலாளர் சிவகுமார், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.