தேசிய தரச்சான்று பெற ஒதுக்கிய நிதியில் முறைகேடு


தேசிய தரச்சான்று பெற ஒதுக்கிய நிதியில் முறைகேடு
x
தினத்தந்தி 15 Sept 2023 4:45 AM IST (Updated: 15 Sept 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று பெற ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.

தேனி

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெறுவதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.3 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து மருத்துவமனையில் உயிர்காக்கும் நவீன மருத்துவ உபரகணங்கள், கூடுதல் கட்டிடங்கள், புதிய சாலை, வண்ண விளக்குகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.

இதற்கிடையே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றிய மீனாட்சிசுந்தரம் லஞ்ச புகாரில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக அதே மருத்துவமனையில் தலைமை பேராசிரியராக பணியாற்றி திருநாவுக்கரசு முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். பின்னர் கடந்த ஒரு ஆண்டாக மருத்துவமனையில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. அப்போது தேசிய தரச்சான்று பெற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு ஒதுக்கீடு செய்த ரூ.3 கோடியே 50 லட்சம் நிதியில் பெருவாரியான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தது.

மேலும் அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் 20 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை என்றும், ரூ.3.50 கோடிக்கு பொய்யான கணக்குகள் காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில், தமிழக மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் குழுவினர் தேனி அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் முறைகேடு குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story