மக்களின் மேம்பாட்டுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
தமிழக மக்களின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
திருப்பத்தூர்
தமிழக மக்களின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
விருந்தினர் மேடை
கல்லல் ஊராட்சிக்குட்பட்ட கண்டரமாணிக்கத்தில் 2022-23 மானிய நிதிக்குழு மானியம் (மாவட்ட ஊராட்சி) நிதியின் கீழ் மஞ்சுவிரட்டு திடலில் புதிதாக கட்டப்பட்ட விருந்தினர் மேடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். புதிய விருந்தினர் மேடையை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு ஆகியவை ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி அனைத்து கிராமப்புற பகுதியிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு என்பது உலகளவில் புகழ்பெற்றதாகும். இந்த மஞ்சுவிரட்டு போட்டியானது அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார். இதுதவிர தமிழகம் முழுவதும் எண்ணற்ற வளர்ச்சி பணிகளை மேற்கொண்டும் வருகிறார்.
கட்டமைப்பு வசதிகள்
அதில் குறிப்பாக ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அனைத்து உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை முறையாக மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அதற்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்று கண்டரமாணிக்கத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக புதிய விருந்தினர் மேடை அமைக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர் மஞ்சரிலட்சுமணன், கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.