திருச்சி சிவா எம்.பி.யுடன் அமைச்சர் கே.என்.நேரு திடீர் சந்திப்பு


திருச்சி சிவா எம்.பி.யுடன் அமைச்சர் கே.என்.நேரு திடீர் சந்திப்பு
x

திருச்சி சிவா எம்.பி.யுடன் அமைச்சர் கே.என்.நேரு திடீரென சந்தித்து பேசினார்.

திருச்சி

கருப்புக்கொடி காட்டினர்

திருச்சி சிவா எம்.பி.யின் வீடு அமைந்துள்ள எஸ்.பி.ஐ.காலனி பகுதியில் கடந்த 15-ந் தேதி இறகு பந்து மைதானம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு. இறகு பந்து மைதானத்தை திறந்து வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் கே.என்.நேரு எஸ்.பி.ஐ. காலனிக்கு காரில் வந்த போது, திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர் நேருவின் கார் அருகே வந்து, இறகுப்பந்து மைதானம் திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் சிவா எம்.பி.யின் பெயரை போடாமல், அவரை அவமானப்படுத்துவதாக கூறி நேருவுக்கு கருப்பு கொடி காட்டினர். அவர்களிடம் கே.என்.நேரு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இதுபற்றி கேட்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார். தகவல் அறிந்த போலீசார் கருப்புக்கொடி காட்டியவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் கே.என்.நேரு இறகு பந்து மைதானத்தை திறந்து வைத்துவிட்டு காரில் புறப்பட்டு சென்று விட்டார். ஆனால் அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டிய சம்பவம் தி.மு.க. நிர்வாகிகளிடையே பரவியது.

கார் கண்ணாடி உடைப்பு

உடனே ஆத்திரம் அடைந்த அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்களான முத்துசெல்வம், காஜாமலை விஜய், ராமதாஸ், 54-வது வார்டு பகுதி துணை செயலாளர் திருப்பதி உள்ளிட்ட சிலர் சிவா எம்.பி.யின் வீட்டுக்குள் புகுந்து அவரது கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

அதன்பிறகு அவர்கள் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையம் சென்று அங்கு அமர்ந்திருந்த சிவா எம்.பி.யின் ஆதரவாளர்களையும் சரமாரியாக தாக்கினார்கள். அப்போது பெண் போலீஸ் ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டது. இந்த மோதல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் மீது செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

அமைச்சர் நேரு-சிவா எம்.பி. சந்திப்பு

இந்தநிலையில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று சென்னையில் இருந்து திருச்சி வந்தவுடன் நேராக சிவா எம்.பி.யின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை சந்தித்து சிறிது நேரம் பேசினார். அதன்பிறகு வெளியே வந்த அமைச்சர் நேரு, சிவா எம்.பி. கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது கே.என்.நேரு கூறியதாவது:-

எனக்கு தெரியாமல் நடந்து விட்டது

கடந்த 15-ந் தேதி நான் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்ததும், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இருந்தது. எந்த ஊரில் எந்த நிகழ்ச்சி நடக்கிறது என்பதுகூட எனக்கு தெரியாது. மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர், மேயர், எம்.எல்.ஏக்கள் என்னை அழைத்த இடத்துக்கு செல்வது வழக்கம். அந்தவகையில் இந்த பகுதியில் இறகுபந்து மைதானம் திறப்பு நிகழ்ச்சி இருக்கிறது என்று சொன்னார்கள். நமது தொகுதியாச்சே என்று நினைத்து நான் வந்தேன். இங்கு வந்தபோது சிலர் என்னிடம் சிவா எம்.பி.யின் பெயர் அழைப்பிதழில் போடாமல் எப்படி வரலாம் என்று கேட்டார்கள். நான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் கேட்க கூறிவிட்டு சென்றுவிட்டேன். அப்போது கருப்புக்கொடி காட்ட முயன்றவர்களை கைது செய்வதற்காக போலீஸ் வேனை சிவா எம்.பி. வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்கள். அப்போது இங்கு நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. எனக்கு இதுபற்றி தெரியாது.

நான் தஞ்சை மாவட்டம் பூதலூரில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டேன். அதன்பிறகு தான் இதுபோன்ற சம்பவம் நடந்துவிட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்களை தேடிக்கொண்டு இருப்பதாக என்னிடம் கூறினார்கள். தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக இவ்வாறு நடந்துவிட்டது.

மனம் விட்டு பேசினேன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம், நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டி காத்து வருபவர்கள். உங்களுக்குள் எந்தவித பிரச்சினையும் இருக்கக்கூடாது என்று சொன்னார்கள். மேலும், அவரை நேரில் சந்தித்து சமாதானம் செய்துவிட்டு வரும்படி கூறினார். உங்கள் இருவருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது கட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் நல்லபெயரை தரும் என்று கூறினார். நானும் முதல்-அமைச்சரிடம், எனக்கு தெரியாமலேயே இது நடந்து விட்டதாக கூறினேன். சிவா எம்.பி.. கட்சியின் மூத்த தலைவர், பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர். அவருக்கு அவமதிப்பு ஏற்பட்டு விட்டால் கட்சிக்கு நல்லதா? என முதல்-அமைச்சர் என்னிடம் கேட்டார். இதையடுத்து நான் தற்போது அவரை சந்தித்து மனம்விட்டு பேசினேன். இனி இதுபோல் நடக்காது என்று அவரிடம் கூறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

கட்சி வளர்ச்சிக்காக...

சிவா எம்.பி. கூறுகையில், "நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று தலைவரின் குரல் எங்கள் செவியில் ஒலித்து கொண்டு இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் பொறுப்புணர்ச்சியோடு இந்த நாட்டை வழி நடத்தி கொண்டு இருக்கிறார். அவருடைய மனம் சங்கடப்படும் அளவுக்கு எந்த காரியமும் நடந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறோம். இப்போது அமைச்சர் நேரு என்னிடம் பேசி உள்ளார். நாங்கள் இருவரும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். இந்த விஷயத்தில் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றார். அதை நான் ஏற்று கொண்டேன். எங்களை பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சி தான் முக்கியம். அவர் ஆற்றுகிற பணியை என்னால் செய்ய முடியாது. நான் செய்கிற பணியை அவர்கள் வரவேற்கிறார்கள். ஆகவே கழக வளர்ச்சிக்காக தான் எங்கள் வருங்கால செயல்பாடு இருக்கும்" என்றார்.


Next Story