புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
புள்ளம்பாடி, லால்குடி ஒன்றியங்களை சேர்ந்த மக்களுக்காக புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புள்ளம்பாடி, லால்குடி ஒன்றியங்களை சேர்ந்த மக்களுக்காக புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புதிய கூட்டுக்குடிநீர் திட்ட தொடக்க விழா
லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சேர்ந்த 109 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.248.59 கோடி மதிப்பில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்ட தொடக்க விழா, அடர்வன குறுங்காடுகள் உருவாக்கம் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு தொடக்க விழா
புள்ளம்பாடி ஒன்றியம் ரெட்டிமாங்குடி ஊராட்சி மணிகண்டம் கிராமத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.36.84 லட்சம் மதிப்பில் கருணை அடிப்படையில் வேலை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, லால்குடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. ஆட்சியில் தான் கூட்டுக் குடிநீர் திட்டம், பலதுறை அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட தேவைகளான குடிநீர், சாலை பணி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசிய திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.
அடர்வன குறுங்காடுகள்
பின்னர் ரெட்டிமாங்குடி கிராமத்தில் வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மியாவாக்கி முறையில் அடர்வன குறுங்காடுகள் உருவாக்கும் திட்டத்தை அமைச்சர்ேக.என்.நேரு தொடங்கி வைத்தார். பெருவளப்பூர் ஊராட்சியில் ரூ.21 லட்சத்தில் வருவாய் ஆய்வாளருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகத்தையும், புள்ளம்பாடியில் ரூ.17.26 லட்சம் மதிப்பில் குறுவட்ட நில அளவையருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
விழாவில் ஒன்றிய குழு தலைவர்கள் ரவிச்சந்திரன், ரசியாகோல்டன்ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி, புள்ளம்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் செல்வராசா, இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, பேரூராட்சிதலைவர் ஆலீஸ்செல்வராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கவேலு, ஸ்ரீதர், கிராமமுக்கியஸ்தர் மணிமாறன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் லால்குடி தாசில்தார் செசிலினாசுகந்தி நன்றி கூறினார்.