காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 9 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ மாறி, மாறி திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை தீவிரமடையவில்லை. குறிப்பாக தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் பருவமழை கை கொடுக்கவில்லை.
இதனால் தமிழக மற்றும் கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மாதம் தோறும் அளிக்க வேண்டிய தண்ணீரும் முறையாக அளிக்கப்படவில்லை.
தண்ணீர் திறப்பு குறைப்பு
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த 31-ந் தேதி அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு இந்த மாதம் 3-ந் தேதி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்ததாலும், மேட்டூர் அணை நீர்மட்டமும் 60 அடிக்கும் கீழே சென்று விட்டதாலும் நேற்று பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டது. அதன்படி அணையில் இருந்து காவிரி டெல்டாபாசனத்துக்காக வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 299 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் 60.11 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 58.99 அடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.