சாலை அமைக்க வகுத்துமலை அடிவார பகுதியில் அளவீடு
சாலை அமைக்க வகுத்துமலை அடிவார பகுதியில் அளவீடு பணி நடைபெற்றது
அலங்காநல்லூர்,
மதுரை பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வகுத்து மலை, கல்லுமலை அடிவாரத்தில் வைகாசிபட்டி, கோவில்பட்டி போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் செல்கிறது. இந்த சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது.
வனத்துறை அனுமதி கிடைக்காத காரணத்தினால் பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை.வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் அனைத்தையும் தார்ச்சாலையாக மாற்ற வேண்டி இப்பகுதி கிராம மக்கள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு கொடுத்து இருந்தனர். இதை பரிசீலித்த சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், வனத்துறை அதிகாரி குருசாமி தபலா, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, அதிகாரிகள் நேற்று காலையில் சம்பந்தப்பட்ட சாத்தியார் அணையை சுற்றியுள்ள வனத்துறை சார்ந்தமலை அடிவார சாலைகள் அனைத்தையும் அளவீடு செய்திருந்தனர். இந்த பணிகள் நடைபெறும் போது, அதிகாரிகள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இருந்தனர். இதுபற்றி கிராம மக்கள் கூறியதாவது, நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் காலம் வந்து விட்டது. இதனால் கல்லுமலைகந்தன் சுவாமி கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கும், எங்களது கிராமத்திற்கு செல்வதற்கு வசதியாக அமையும். இதற்காக அரசுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக வெங்கடேசன் எம்.எல்.ஏ. கூறியதாவது, வைகாசிபட்டி பகுதி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த சாலை பயனுள்ளதாக அமையும். இந்த பணிகள் தொடங்க வேண்டிய ஏற்பாடுகள் துரிதமாக நடக்கும். இதேபோல் சரந்தாங்கி, முடுவார்பட்டி மலை சாலைகளும், வனத்துறையின் அனுமதியின் பேரில் பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.