அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 9 பேருக்கு சிகிச்சை
அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 9 பேர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கீழக்கரை,
அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 9 பேர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பல்லி விழுந்த உணவு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பனையங்கால் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது.
இங்கு நேற்று குழந்தைகள் கவ்யா (வயது4), ஜான்சன் (2), ரெனீஸ் வருண் (3), தர்ஷன் (4), பெத்ரு பாண்டியன் (2), தன்சிகா (2), மிகாயான் (2) ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். மேலும் அங்கு சென்றிருந்த பெற்றோர் தேவிகா (30) ஜென்சியா (27) ஆகியோரும் உணவை ருசித்துள்ளனர்.
அப்போது உணவில் பல்லி இறந்து கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே உணவு சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 9 பேரையும் வாகனத்தில் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து கீழக்கரை தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர்.
கலெக்டர் ஆறுதல்
மேலும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று குழந்தைகளை பார்வையிட்டு பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், தில்லைேயந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தில்லை ரகுமான், அரசு மருத்துவர் உசேன் மற்றும் தி.மு.க. அயலக அணி ஹனிபா, போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் ஆகியோர் இருந்தனர். கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:- பனையங்கால் அங்கன்வாடி மையத்தில் 10 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று 7 குழந்தைகள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் வகையில் 4 குழந்தைகளுக்கு உணவு பரிமாறி 5 வது குழந்தைக்கு உணவு பரிமாற செல்லும் போது உணவில் பல்லி இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக உணவு பரிமாறுவது நிறுத்தப்பட்டதுடன் உணவு சாப்பிட துவங்கிய குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் உள்ளனர். அனைத்து குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.