உரம் தயாரிக்கும் மையங்களில் மேயர், ஆணையாளர் ஆய்வு
சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையங்களை மேயர், ஆணையாளர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையங்களை மேயர், ஆணையாளர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆய்வு
சேலம் மாநகராட்சி பகுதியில் 28 இடங்களில் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அஸ்தம்பட்டி மண்டலம் 12-வது வார்டு காக்காயன்காடு, 15-வது வார்டு ராம் நகர், 9-வது வார்டு வாய்க்கால் பட்டறை, 37-வது வார்டு குண்டுகல்லூர் தாதம்பட்டி, 60-வது வார்டு சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையங்களில் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள், தினமும் ஒவ்வொரு மையத்துக்கும் எத்தனை டன் குப்பைகள் கொண்டு வரப்படுகிறது எனவும், குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் முறை பற்றியும், ஒவ்வொரு மையத்திலும் பணிபுரியும் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்தும் அங்கிருந்த மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
எந்திரங்களில் பழுது
இதனை தொடர்ந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை எந்த முறையில் தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது?, அவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள உரங்களின் விற்பனை குறித்தும் கேட்டறியப்பட்டது. மேலும், நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையங்களில் உள்ள அனைத்து யூனிட்களும் முறையாக செயல்படுகிறதா?, இங்கு உள்ள எந்திரங்கள் மற்றும் மின்மோட்டார்கள் நல்ல முறையில் இயங்குகிறதா? என்பதையும் மேயர், ஆணையாளர் கேட்டறிந்த போது சில யூனிட்களில் உள்ள எந்திரங்களில் சிறு, சிறு பழுதுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 15 நாட்களுக்குள் 28 மையங்களில் செயல்படும் அனைத்து யூனிட்களும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மேயர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார். பின்னர் அவர் தற்போது அனைத்து மையங்களிலும் தயாரிக்கப்பட்ட உரங்களின் இருப்பு எவ்வளவு உள்ளது. ஒரு முறை உரம் தயாரிக்க ஆகும் நாட்கள் எவ்வளவு என்பது குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். ஆய்வின்போது மாநகர நல அலுவலர் யோகானந்த், மாநகர பொறியாளர் ரவி, உதவி ஆணையாளர் கதிரேசன், கவுன்சிலர் தெய்வலிங்கம் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.