வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா
திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் கீழையூரில் பிரசித்திபெற்ற சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா நாளை மறுநாள்(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக நாளை(வெள்ளிக்கிழமை) வினாயகர் பூஜை நடக்கிறது. தொடர்ந்து 25-ந் தேதி கொடியேற்றமும், அதைத்தொடர்ந்து சந்திரசேகர் சாமிகள் கோவிலை வலம் வருதல் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பின்னர் வருகிற 3-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சாமிக்கு திருக்கல்யாணம், 4-ந் தேதி பாரிவேட்டை, 5-ந் தேதி கட்டு தேர் ஆலய உள்வலம் வரும் நிகழ்ச்சி, 6-ந் தேதி மாசி மக தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து 7-ந் தேதி அம்மனுக்கு அபிஷேகமும், 8-ந் தேதி மகா சண்டிகேஸ்வரருக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. 9-ந் தேதி விடையாற்றி உற்சவம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.