செல்லியம்பாளையத்தில் 57 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவில் தேரோட்டம்
செல்லியம்பாளையத்தில் 57 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
தலைவாசல்:
மாரியம்மன் கோவில்
தலைவாசல் அருகே செல்லியம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் கடந்த 57 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. இதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் பக்தர்கள் பங்களிப்புடன் புதிய தேர் தயார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி 57 ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு சக்தி அழைத்தல், காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார்.
நேர்த்திக்கடன்
மேலும் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு, மரம் ஏறும் நிகழ்ச்சி, தெருக்கூத்து, நாடகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதுமட்டுமின்றி பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
இந்த நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை 8 மணிக்கு பக்தர்கள் பூங்கரகம், அக்னி கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பால் குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்டம்
பின்னர் மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 7.30 மணிக்கு நிலையை அடைந்தது.. தேரை சுற்றிலும் தேங்காய், மாங்காய் என விளைபொருட்கள் கட்டி தொங்கவிட்டு அழகுப்படுத்தி இருந்தனர். தேரோட்டத்தில் தலைவாசல், புத்தூர், ராயப்பனூர், கூட்ரோடு, சிறுவாச்சூர், ஊனத்தூர், வரகூர் உள்பட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.