மஞ்சக்கொல்லை, சிக்கல், பொரவாச்சேரி பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்


மஞ்சக்கொல்லை, சிக்கல், பொரவாச்சேரி பகுதிகளில்   வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்
x

மஞ்சக்கொல்லை, சிக்கல், பொரவாச்சேரி பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்

நாகப்பட்டினம்

மழை காலம் தொடங்குவதற்குள் மஞ்சக்கொல்லை, சிக்கல், பொரவாச்சேரி ஆகிய பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.

மாவட்ட ஊராட்சி கூட்டம்

நாகையில் மாவட்ட ஊராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-

கணேசன்(அ.தி.மு.க.): நாகையில் கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எப்போது திறக்கப்பட உள்ளது. விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சக்கொல்லை, சிக்கல், பொரவாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடங்குவதற்குள் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

குமார்(தி.மு.க.): மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை ஒரு அரசு நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுப்பதில்லை. எந்த தகவலும் அரசு அலுவலர்கள் தெரிவிப்பதில்லை. மயிலாடுதுறை மல்லியம் பஸ் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் குத்தாலத்திலிருந்து ஏ.வி.சி. கல்லூரி வரை இயக்கப்பட்ட பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. சீர்காழியிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்பட்ட டவுன் பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநடப்பு செய்து போராட்டம்

சுரேஷ் (தி.மு.க.): அரசு நிகழ்ச்சிகளில் மாவட்ட கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை. இதுகுறித்து பலமுறை கூட்டத்தில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்ந்தால் வரும் கூட்டங்களில் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்.

துளசிரேகா(தி.மு.க.): எனது ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் திறக்கப்பட்டது. அதற்கு கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஊராட்சி சார்பில் கலெக்டர் மற்றும் அனைத்து அரசு துறைகளுக்கும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

முன்கூட்டியே கோரிக்கைகளை

தலைவர்: இது சம்பந்தமாக எல்லாத்துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதுகுறித்து தெரிவித்து, வரும் நாட்களில் இதுபோல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன்கூட்டியே தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கூட்டத்திற்கு அழைத்து விளக்கம் கேட்க முடியும். எனவே கவுன்சிலர்கள் அனைவரும் முன்கூட்டியே கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story