சோமேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
கிருஷ்ணகிரி பழைய பேட்டை சோமேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் 1030 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. தொடர்ந்து சிவபெருமான் பக்தி பாடல்கள், தேவார இசை நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு, கர்நாடகா சங்கீதம், பஜனை, அமர்நீதி நாயனார், தண்டி அடிகள் நாயனார் வரலாறு, திருநாளைப்போவார் நாயனார் வரலாறும், இசை சொற்பொழிவும், நாட்டியாஞ்சலியும் நடந்தது. நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, 108 சங்கு ஸ்தாபனம், கலச ஸ்தாபனம், முதல் கால யாக பூஜைகள் நடந்தன.
மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று காலை 2-ம் கால கணபதி பூஜை, கோ பூஜை, சங்கு பூஜை, கலச பூஜை, தம்பதி சங்கல்பமும், 9.15 மணிக்கு உபசார பூஜை, கலச புறப்பாடும் நடந்தன. காலை 10 மணிக்கு சோமேஸ்வர பெருமானுக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், பிரசன்ன பார்வதி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.