மணப்பாறை நகராட்சி கூட்டம், துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
கவுன்சிலர்கள் பங்கேற்காததால் மணப்பாறை நகராட்சி கூட்டம், துணைத்தலைவர் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது.
மணப்பாறை நகராட்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகளில் 11 வார்டில் அ.தி.மு.க.வும், 11 வார்டில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், 5 இடங்களிலும் சுயேட்சைகளும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, நடைபெற்ற நகராட்சி தலைவருக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று சுதா பாஸ்கரன் நகராட்சி தலைவரானார். அதன் பின்னர் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், சுயேட்சைகள் தேர்தலில் பங்கு பெறாததால் போதிய உறுப்பினர்கள் இன்றி துணைத்தலைவர் தேர்தல் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் 2 முறை நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் மணப்பாறை நகராட்சி கூட்டம் நடத்திட தலைவர் தரப்பில் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றதை தொடர்ந்து நேற்று நகராட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஒத்திவைப்பு
இந்தநிலையில் 1-வது வார்டு கவுன்சிலரான செல்லம்மாள் அ.தி.மு.க.வினரால் கடத்தப்பட்டதாக அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் அ.தி.மு.க. நகராட்சி கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனால் அ.தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள் நேற்று நகராட்சி கூட்டத்திற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
மணப்பாறை நகராட்சி அலுவலகம் முழுக்க போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் முன்பக்க தகவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை 27 கவுன்சிலர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் கூட்டம் நடைபெறாத நிலை ஏற்பட்டது.
அதன் பின்னர் மதியம் 2.30 மணிக்கு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்தலிலும் கவுன்சிலர்கள் யாரும் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.