மார்க்கெட் கட்டிட கழிவுகளை லாரிகளில் திருடி விற்றவர் கைது


மார்க்கெட் கட்டிட கழிவுகளை லாரிகளில் திருடி விற்றவர் கைது
x

மார்க்கெட் கட்டிட கழிவுகளை லாரிகளில் திருடி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டையில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படுகிறது. இதற்காக அங்கிருந்த கடைகள் அருகிலேயே தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்த பழைய கடைகள் அனைத்தும் முழுமையாக இடிக்கப்பட்டு அந்த கட்டிடக்கழிவுகள் முழுவதும் அம்பேத்கர் காலனியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் தற்போது மார்க்கெட் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் மண் குவியல் அளவு குறைந்து வருவதாக பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். இதையொட்டி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், மர்ம நபர்கள் லாரியில் மண் குவியலை அள்ளிச்சென்று 1 லோடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கே.டி.சி. நகர் வ.உ.சி தெருவை சேர்ந்த மாரி மற்றும் அவரது கூட்டாளிகளான நல்லூரை சேர்ந்த ராமர், மணக்கரையை சேர்ந்த செந்தில் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மண் ஏற்றி, விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மாரியை போலீசார் கைது செய்தனர். பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராமர், செந்தில் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story