சித்தூர்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்திய கடத்தல் மன்னன் கைது
சித்தூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கடத்தல் மன்னனை போலீசார் கைது செய்தனர்.
சித்தூர்:
சித்தூர் மாவட்ட எஸ்பி நிஷாந்த் பல கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் வந்தது. இதனடிப்படையில் டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தலைமையில் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் சல்லடை போட்டு வாகனங்களை சோதனை செய்து வந்தன.
இந்த நிலையில் திருப்பதி-வேலூர் நெடுஞ்சாலையில் செர்லோபள்ளி அருகில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த வாகனங்களில் மூன்று கார்கள் ஒரு மினி லாரி ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. போலீசாரை பார்த்தவுடன் வாகனங்களை தூரத்திலேயே நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடுவதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.
இதில் செம்மரம் கடத்தி வந்த 6 பேர் தப்பி ஓடிய நிலையில் தமிழகத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். இவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் (வயது 29), வேல் (32) என தெரியவந்தது. இதில் பெருமாள் என்பவர் மீது ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் பல்வேறு உன்னத முறைகளை பயன்படுத்தி செம்மரங்களை கடத்தி வரும் கடத்தல் மன்னன் என்பதும் தெரியவந்தது.
மேலும் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சாண்டி, அஜித், சரத், வினோத், அஜித், ரமேஷ் ஆகிய அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை கடத்தி சென்னையை சேர்ந்த முக்கிய புள்ளிகளான நான்கு பேருக்கு கை மாற்றுவது தெரிய வந்தது.
இவர்கள் இது போன்ற பல்வேறு நபர்கள் மூலம் செம்மரக்கட்டைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் தலைமறைவாக உள்ளதால் இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.