மதுரை ரெயில் தீ விபத்துக்கு ரெயில்வே பாதுகாப்பு துறை தான் காரணம்வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு


மதுரை  ரெயில் தீ விபத்துக்கு ரெயில்வே பாதுகாப்பு துறை தான் காரணம்வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு
x

மதுரையில் நடந்த ரெயில் தீ விபத்துக்கு ரெயில்வே பாதுகாப்பு துறை தான் காரணம் என கடலூரில் வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர்


ரெயில் நிலையத்தில் ஆய்வு

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான வெங்கடேசன் நேற்று மாலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் இன்று (அதாவது நேற்று) நடந்த ரெயில் தீ விபத்தில் 9 பேர் இறந்துள்ளனர். இந்த ரெயிலை, ரெயில்வே பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்யவில்லை.

இந்த விபத்து பயணத்தின் போது நிகழ்ந்திருந்தால், அதிகளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். இருசக்கர வாகனத்தை ரெயிலில் பார்சல் அனுப்ப வேண்டும் என்றால், அந்த வாகனத்தில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாமல் இருந்தால்தான் பார்சலுக்கே அனுமதிப்பார்கள்.

திருப்பாதிரிப்புலியூரில் மேம்பாட்டு பணி

ஆனால் 10 நாட்கள் கியாஸ் சிலிண்டரோடு, தீப்பிடிக்கும் பொருட்களோடு பல்வேறு ரெயில் நிலையங்களை கடந்து வந்துள்ளது. இதற்கு ரெயில்வே பாதுகாப்பு துறையினரின் தோல்வி தான் காரணம். அதனால் ரெயில்வே பாதுகாப்பு துறையை பலப்படுத்த வேண்டும். ரெயில்வேயில் உள்ள 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.

தென்னக ரெயில்வேயில் 75 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. அதில் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் பணிகள் தொடங்கும். திருப்பாதிரிப்புலியூர் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கும், நின்று செல்லவும் நடவடிக்கை எடுப்பேன்.

கடலூர் பெயர் மாற்றம்

திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக நடவடிக்கை மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகரமன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சந்திரசேகரன், வக்கீல் திருமார்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், கடலூர் மாநகர பொதுநல கூட்டமைப்பு தலைவர் எஸ்.என்.கே.ரவி, மீனவர் பேரவை தலைவர் சுப்பராயன் மற்றும் கடலூர் ரெயில்வே நிலைய அதிகாரி வாசு உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story