மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் மற்ற நாட்கள் அபிஷேகம், தீபாராதனைகளும் நடைபெறும். மேலும் ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகளும், ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் நடைபெறும். அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த சமயம் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்துவார்கள். இந்நிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த பணியில் மதுரை அன்னபூரணி சேவா பக்தர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர்கள் அய்யனார், சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்டியலில் ரூ.22 லட்சத்து 59 ஆயிரத்து 501, தங்கம் 194 கிராம், வெள்ளி 265 கிராம் இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மடப்புரம் கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி தலைமையில் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.