வரத்து குறைவு எதிரொலி: ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை 'கிடுகிடு' உயர்வு


வரத்து குறைவு எதிரொலி: ஈரோடு மார்க்கெட்டில்  காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 10 Jun 2023 1:15 AM IST (Updated: 10 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைவு காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

ஈரோடு

வரத்து குறைவு காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

வெயிலின் தாக்கம்

ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட தற்காலிக காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தாளவாடி, சேலம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 100 டன் முதல் 120 டன் வரை காய்கறிகள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.

மேலும் இங்கு மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் நடந்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை. இதனால் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தினமும் சதம் அடித்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகளின் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது.

பீன்ஸ்-மிளகாய்

தற்போது தொடர் முகூர்த்த நாட்கள் வருவதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது. தினமும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு 7 ஆயிரம் பெட்டிகளில் தக்காளி கொண்டு வரப்படும். நேற்று 3 ஆயிரம் பெட்டிகளில் மட்டுமே தக்காளி வந்தது. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி 15 ரூபாய் உயர்ந்து ரூ.40-க்கு விற்பனையானது.

இதேபோல் ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.100-க்கும், ரூ.70-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.130-க்கும், ரூ.25-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.40-க்கும், ரூ.70-க்கு விற்பனையான பச்சை மிளகாய் ரூ.100-க்கும் விற்பனையானது.

காய்கறிகளின் விலை

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

சுரைக்காய் ரூ.15, இஞ்சி ரூ.220, கேரட் ரூ.70, பீட்ரூட் ரூ.50, முட்டைகோஸ் ரூ.20, கோவக்காய் ரூ.30, மாங்காய் ரூ.20, சின்னவெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை, பெரியவெங்காயம் ரூ.30, கத்தரிக்காய் ரூ.60, புடலங்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.40, பாகற்காய் ரூ.60, கருப்பு அவரை ரூ.110, குடை மிளகாய் ரூ.70.


Next Story