ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு
ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருடப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி குளக்கரை தெருவை சேர்ந்தவர் அமலாராணி. இவர் ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அமலாராணி அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
அதே பகுதியில் வடமாநில இளைஞர் வீட்டின் பூட்டை உடைத்து செல்போனை திருடி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.