போதிய வருமானம் இல்லாததால் தடுமாறும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம்


போதிய வருமானம் இல்லாததால் தடுமாறும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போதிய வருமானம் இல்லாததால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் அத்தொழிலை விட்டு விட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

சிவகங்கை

காரைக்குடி

போதிய வருமானம் இல்லாததால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் அத்தொழிலை விட்டு விட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் செட்டிநாடு பகுதியில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் இருந்தனர். இவர்கள் அதிக அளவு எடை கொண்ட செட்டிநாடு ரக கைத்தறி சேலைகள் தறியால் நெய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி பிழைப்பை நடத்தி வந்தனர். இதையடுத்து இந்த கைத்தறி நெசவாளர்களின் தேவைக்காக இந்த பகுதியில் சாயப்பட்டறையும் இயங்கி வந்தது. இந்தநிலையில் காலப்போக்கில் ரெடிமேட் ஆடை மோகத்தில் படிப்படியாக இவர்களின் வாழ்க்கையில் போதிய வருமானம் கிடைக்காமல் போனதால் தற்போது 300 முதல் 400 தொழிலாளர்கள் மட்டுமே இந்த தொழிலை செய்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகைக்கு 2 மாதத்திற்கு முன்பே பல்வேறு இடங்களில் இருந்து இந்த கைத்தறி நெசவு புடவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிக அளவில் ஏற்றுமதி செய்வது வழக்கம். ஆனால் தற்போது படிப்படியாக குறைந்து அன்றாடம் பிழைப்பிற்கு வருமானம் வந்தாலே போதும் என்ற நிலைக்கு இத்தொழில் தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கைத்தறி தொழிலுக்கு பல்வேறு இடங்கள் இருந்தாலும் செட்டிநாடு கைத்தறிக்கு என்று தனி மவுசு உள்ளது. அந்த வகையில் எடை குறைந்த அளவில் இங்கு பல்வேறு ரகங்களில் சேலைகள் செய்யப்படுகிறது. கட்டம், பிளேன், தாழம்பூ கரை, ருத்ராட்சை பார்டர், அன்ன பச்சை பார்டர், புதுரக டிசைன் உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

வீழ்ச்சியை நோக்கி

ஆனால் காலப்போக்கில் இந்த சேலைக்கு பதிலாக ரெடிமேட் ரக சேலைகள் வரத்தொடங்கியதால் படிப்படியாக இந்த தொழில் நசிவுற்று போனது. இன்றைய நிலவரப்படி இந்த பகுதியில் 200 முதல் 400 தொழிலாளர்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தடையால் மேலும் இந்த தொழில் முடங்கிய நிலையில் தற்போது தான் ஓரளவிற்கு மீண்டு வந்துள்ளது. எனது தறியில் மட்டும் இதற்கு முன்பு 10 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது வெறும் 3 பேர் மட்டுமே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இந்த தொழிலுக்கு செல்ல விரும்பாததால் தொடர்ந்து வருகிறேன்.

கனகா (தறி நெசவாளர்): கடந்த காலங்களில் இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பிழைப்பை நடத்தி வந்தன. ஆனால் தொடர்ந்து இந்த தொழில் நலிவடைந்து வருவதால் தற்போது சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே இந்த தொழிலை செய்து வருகிறோம். இருப்பினும் எங்களது தொழிலுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது ஒரு வகையில் மகிழ்ச்சியை கொடுத்தாலும் கூட தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி செல்வதால் தற்போது அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என தெரியாமல் இருந்து வருகிறோம். வீழ்ச்சியை நோக்கி செல்லும் இந்த தொழிலுக்கு தமிழக அரசு பல்வேறு முறையில் மானியங்கள் வழங்கி தொடர்ந்து நடத்துவதற்கு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story