புயலின் நகரும் வேகம் அதிகரிப்பு: மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் 'மாண்டஸ்' புயல்...!
மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Live Updates
- 9 Dec 2022 8:22 PM IST
மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் 'மாண்டஸ்' புயல்
சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது மாண்டஸ் புயல். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 9 Dec 2022 7:52 PM IST
கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைசாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- 9 Dec 2022 7:33 PM IST
மாமல்லபுரத்தில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிப்பு
மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மாமல்லபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
- 9 Dec 2022 7:26 PM IST
எந்த மழை வந்தாலும், என்ன காற்றடித்தாலும் மக்களை காக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை,
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.
பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தபின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எந்த மழை வந்தாலும், என்ன காற்றடித்தாலும் அதை சமாளித்து, மக்களை காக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து அரசு ஈடுபட்டு வருகிறது. மாவட்டங்களில், அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்புக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர் என்றார்.
- 9 Dec 2022 7:16 PM IST
சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கடக்க உள்ள 13வது புயல் மாண்டஸ்...!
சென்னை
சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கடக்க உள்ள 13வது புயல் இதுவாகும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் புயல் கரையை கடக்கும். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்.
121 ஆண்டுகளில் மாமல்லபுரத்துக்கு அருகே புயல் கரையை கடந்தால் இது 13வது முறையாகும். மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 70 கி.மீ. முதல் 80 கி.மீ வரை இருக்கும் என்றார்.
- 9 Dec 2022 7:10 PM IST
பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், புயல் நிலவரங்கள் தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.
- 9 Dec 2022 5:43 PM IST
சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. வங்கககடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 13 லிருந்து 14 கி.மீ அதிகரித்துள்ளது.
- 9 Dec 2022 5:12 PM IST
மாண்டஸ் புயல்: மின் விநியோகம் நிறுத்தமா?
காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- 9 Dec 2022 5:07 PM IST
மெரினா கடற்கரை : கடல் சீற்றத்தால் மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பால பாதை சேதம்
மாண்டஸ் புயல் காரணமாக மெரினாவில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் ராட்சத அலைகள் எழுந்தன. இதில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகள் நடைபாதை சேதமானது. அதில் பொருத்தப்பட்டிருந்த மரபலகைகள் அலையின் வேகத்தில் சிக்கி உடைந்து நொறுங்கியுள்ளன. தொடங்கப்பட்ட 2 வாரத்திலேயே மாற்று திறனாளிகள் நடைபாதை அலையில் சிக்கி சேதம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.