விசைத்தறி உரிமையாளரை குத்திக்கொன்ற வாலிபருக்கு ஆயுள்
விசைத்தறி உரிமையாளரை குத்திக்கொன்ற வாலிபருக்கு ஆயுள்
திருப்பூர்
சண்டை சேவலை திருடியதை தட்டிக்கேட்ட விசைத்தறி உரிமையாளரை வாலிபர் கொலை செய்தார். அந்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சேவல் திருட்டு
திருப்பூரை அடுத்த பல்லடம் இச்சிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 20). இவர் அந்தப்பகுதியில் சொந்தமாக விசைத்தறி குடோன் வைத்து தனது தந்தையுடன் சேர்ந்து கவனித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (20). இவர் தனது பெற்றோருடன் மங்கலம் கருகம்பாளையத்தில் குடியிருந்து விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கார்த்திக் சேவல்களை வளர்த்து சேவல் சண்டையில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் கார்த்திக்கின் சேவலை, பிரேம்குமார் திருடி சென்று விட்டார். இதை அறிந்த கார்த்திக், பிரேம்குமாரை பிடித்துச்சென்று அடித்து உதைத்து எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
ஆயுள் தண்டனை
இதைத்தொடர்ந்து கடந்த 19-12-2021 அன்று இரவு கார்த்திக், கருகம்பாளையத்தில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் சமாதானம் பேசுவதற்காக பிரேம்குமாரின் வீட்டுக்கு கார்த்திக் சென்றார். அங்கிருந்த பிரேம்குமாரிடம் பேசியபோது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பிரேம்குமார் வீட்டுக்குள் இருந்து கத்தியை எடுத்து வந்து கார்த்திக்கின் கைகள் மற்றும் நெஞ்சுப்பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கார்த்திக் சரிந்து விழுந்து இறந்தார்.
இதுகுறித்து மங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கொலை செய்த குற்றத்துக்காக பிரேம்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.