தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர்,
பல்லடத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கல்லால் தாக்கி கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் நவாஸ் (வயது 50). பெயிண்டர். இவரும் ராசாத்தி (40) என்பவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். ராசாத்தியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி நவாஸ் தகராறு செய்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 21-3-2015 அன்று சின்னக்கரையில் அதிகாலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு கிடந்த குழவிக்கல்லை எடுத்து ராசாத்தியின் தலையில் நவாஸ் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராசாத்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயுள் தண்டனை
அங்கு சிகிச்சை பலனின்றி ராசாத்தி இறந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நவாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக நவாசுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகிவாதாடினார்.