வடமாநில வாலிபர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை


வடமாநில வாலிபர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x

மோகனூர் அருகே புரோக்கர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வடமாநில வாலிபர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

நாமக்கல்

புரோக்கர் கொலை

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சிம்பு ஜாபர் (வயது 26). இவர் வட மாநிலங்களில் இருந்து கூலித்தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கோழிப்பண்ணைகளுக்கு கூலி ஆட்களை அனுப்பி வைப்பதில் சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த ரஜ்மன் (21), சாம்லுராம் (21) ஆகியோருக்கும், சிம்பு ஜாபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மேலும் கமிஷன் பிரச்சினையில் இருவரும் சிம்பு ஜாபரை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அறிவழகன் வாதாடி வந்தார்.

இந்தநிலையில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் ரஜ்மன், சாம்லுராம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இருவரும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனிடையே வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.


Next Story