சட்ட விழிப்புணர்வு முகாம்
சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் வாகனம் மற்றும் தொலைக்காட்சி சட்ட விழிப்புணர்வு பிரசார முகாம் சாலைக்கிராமத்தில் நடந்தது. மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியும், இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், நீதிபதியுமான ஹரி ராமகிருஷ்ணன் உத்தரவின்படியும் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் இளையான்குடி நீதிமன்றத்தில் இருந்து தொடங்கி நடந்தது. தொடர்ந்து சாலைக்கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களிடம் தொலைக்காட்சியில் சட்ட விழிப்புணர்வு பற்றிய திரைப்படம் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் சட்ட பணிகள் குழுவை நாடி பயன்பெறும் விதங்கள் குறித்தும் காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமில் சிவகங்கை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி அர்ச்சனா குழந்தைகள் பாதுகாப்பிற்காக 1098 தொலைபேசியை பயன்படுத்தும் விதம் பற்றி பேசினார். குழந்தைகள் கடத்தல் தடுப்பு போலீசார் கலைச்செல்வி கயல்விழி, சரவணன், மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தின் சட்ட தன்னார்வலர் பாலமுருகன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பெண் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு சட்டம் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு இளவரசன் செய்திருந்தார்.