மொடக்குறிச்சி அருகே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரங்களை சேதப்படுத்திய மர்மநபர்கள்; போலீசார் வலைவீச்சு
மொடக்குறிச்சி அருகே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரங்களை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரங்களை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாய்க்கால் சீரமைப்பு பணி
மொடக்குறிச்சி அருகே உள்ள பட்டாசுபாளி என்ற இடத்தில் கடந்த ஒரு வாரமாக கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 2 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பணியாளர்கள் பாண்டிபாளையம் பகுதியில் தங்கியிருந்து வாய்க்காலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொக்லைன் எந்திரங்கள் மூலம் வாய்க்காலில் உள்ள புதர்களை அகற்றி சீரமைக்கும் பணியை செய்து வருகின்றனர். பின்னர் மாலை 5 மணி அளவில் அங்கேயே பொக்லைன் எந்திரங்களை நிறுத்தி பூட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.
பொக்லைன் எந்திரங்கள் சேதம்
அதேபோல் பணியாளர்கள் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பணியை முடித்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு சென்றுவிட்டனர். அதன்பின்னர் அவர்கள் நேற்று காலை மீண்டும் பணிக்கு வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 பொக்லைன் எந்திரங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொக்லைன் எந்திரங்களை பார்வையிட்டனர்.
மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் மாலை வேலை முடித்து பணியாளர்கள் பொக்லைன் எந்திரங்களை பூட்டிவிட்டு சென்ற பிறகு அங்கு மர்மநபர்கள் வந்துள்ளனர். பின்னர் பொக்லைன் எந்திரங்களின் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மொடக்குறிச்சி அருகே கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.