ஜீப் எரிந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வக்கீல்கள் மறியல் திண்டிவனம்-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ஜீப் எரிந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத ரோஷணை போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டிவனம்-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டிவனம்,
வக்கீல் ஜீப் தீவைத்து எரிப்பு
திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் நல்லியக்கோடன். வக்கீலான இவர் ஒலக்கூர் ஒன்றிய தி.மு.க. வக்கீல் பிரிவு அமைப்பாளராக இருந்து வருகிறார். நல்லியக்கோடன் கடந்த 6-ந்தேதி தனக்கு சொந்தமான ஜீப்பை ஊரல் கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டு தோட்டத்தில் நிறுத்தியிருந்தார். அப்போது அவருடைய ஜீப் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்து சேதமானது. இதுபற்றி நல்லியக்கோடன் ரோஷணை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் அந்த வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த திண்டிவனம் வக்கீல்கள் நல்லியக்கோடனுக்கு ஆதரவாக நேற்று திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஜீப் எரிந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத ரோஷணை போலீசாரை கண்டித்து திண்டிவனம்-சென்னை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சாலையின் இருபுறமும் நீண்டவரிசையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம், மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஜீப் எரிந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற வக்கீல்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.