இந்தியா போஸ்ட்-தெற்கு ரெயில்வே இணைந்து பார்சல் சேவை அறிமுகம்


இந்தியா போஸ்ட்-தெற்கு ரெயில்வே இணைந்து பார்சல் சேவை அறிமுகம்
x

இந்தியா போஸ்ட் மற்றும் தெற்கு ரெயில்வே இணைந்து பார்சல் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், இந்தியா போஸ்ட் உடன் சேர்ந்து 'ஜாயின்ட் பார்சல் தயாரிப்பு' என்ற பார்சல் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த பார்சல் கார்கோ ரெயில் நேற்று முன்தினம் ராயபுரத்திலிருந்து கிளம்பி கவுகாத்தி சென்றடைந்தது. இந்த ரெயிலை சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சென்னை வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் நடராஜன் உடனிருந்தார். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்களை எடுத்துச் செல்லும் வசதி இந்த சேவையின் கூடுதல் சிறப்பாகும். இதன் மூலம் பல சிறு மற்றும் குறு தொழில் வியாபாரிகள் பயனடைவார்கள்.

இந்த சிறப்பு ரெயிலின் முதல் பயணத்தில் ரெடிமேட் துணிகள், மோட்டார் பாகங்கள், துருப்பிடிக்காத இரும்பு பொருட்கள், கொரியர் பொருட்கள் என ரூ.2.2 லட்சம் மதிப்புள்ள 29 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன.

இந்த ரெயில் சேவை வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ராயபுரத்திலிருந்து புறப்பட்டு கவுகாத்தி சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story