போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு:சார்பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு


போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு:சார்பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே போலி ஆவணம் மூலம் நிலத்தை அபரித்த சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி அருகே உள்ள வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 66). இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், 'எனது தந்தை தலைமலை கடந்த 2005-ம் ஆண்டு இறந்து விட்டார். எனக்கு ஒரு அக்காள், 3 தங்கைகள். தந்தை இறப்புக்கு பிறகு எனது தாய் பார்வதி வாரிசு சான்றிதழ் பெற்றார். அதில் தாய், மகன், மகள்கள் என 6 பேர் வாரிசுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எனது தங்கை மாரியம்மாள் என்பவர், போலியான வாரிசு சான்றிதழ், போலியான ஆவணங்களை பயன்படுத்தி எனது தந்தை பெயரில் இருந்த நிலங்களை தனது மகனுக்கு தானமாக கொடுத்தது போன்று பத்திரப்பதிவு செய்துள்ளார். அதற்கு தேனி சார்பதிவாளர், வடமதுரை சார்பதிவாளர் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலரும் முறையாக கள விசாரணை நடத்தாமல் போலியான வாரிசு சான்றிதழ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், இந்த சம்பவம் குறித்து மாரியம்மாள், அவருடைய மகன் ரஞ்சித்குமார், தேனி சார்பதிவாளர் உஷாராணி, வடமதுரை சார்பதிவாளர் முகமது அப்துல்காதர், வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் காந்தி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story