ராணிப்பேட்டையில் ஏரி, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏரி, கால்வாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், பவர்கிரிட் மூலம் உயர் மின்கோபுரங்கள் அமைத்த வகையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. சாத்தூர், நெமிலி, சென்னசமுத்திரம், காவேரிப்பாக்கம், பாகவெளி, உளியூர், சீக்கராஜபுரம், வடகால் கிராமங்களில் உள்ள ஏரி கால்வாய் தூர்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பிரதி மாதம் முதல் வாரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும். தாமரைப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேமராக்கள் பழுதாகி உள்ளன என பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். கூட்டத்தில், விவசாயிகள் வைத்த கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், வேளாண்மை துணை இயக்குனர் விஸ்வநாதன், வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.