கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தங்களது வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து மகிழ்ந்தனர்.
மேலும் குழந்தை பருவத்தில் கண்ணன் வீட்டிற்கு வருவது போன்று வாசலின் நுழைவுவாயிலில் இருந்து பூஜை அறை வரை சிறு குழந்தைகளின் கால் தடங்களை பதித்து, கண்ணன் விரும்பும் சீடை, முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை படைத்து வழிபாடு நடத்தினார்கள். இதனால் கிருஷ்ணர் தங்கள் இல்லத்துக்குள் வந்து ஆசி வழங்குவார் என்பது ஐதீகம்.
சிறுவர்கள் வேடம் அணிந்து...
புதுக்கோட்டை விட்டோபா பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறுவர்கள் கண்ணன், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். இதேபோல் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டையில் கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மேலும் கிருஷ்ணர், ராதை அலங்காரம் போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர்- சிறுமிகள், கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து பங்கேற்றனர்.
மணமேல்குடி அருகே பொன்னகரத்தில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் சீதேவி, பூதேவி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி பெருமாளுக்கு தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
பால்குட ஊர்வலம்
கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தகப்பட்டி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.