கல்வராயன்மலை பகுதியில் மழை முழு கொள்ளளவை எட்டுகிறது கோமுகி அணை உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை


கல்வராயன்மலை பகுதியில் மழை  முழு கொள்ளளவை எட்டுகிறது கோமுகி அணை  உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
x

கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டுகிறது. இதனால் உபரிநீர் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படும் என்பதால், கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 44 அடிவரை தண்ணீர் சேமித்து வைக்கப்படும். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.

இந்நிலையில், கிழக்கு தொடர்ச்சி மலை தொடரின் ஒரு பகுதியான கல்வராயன் மலை பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த மழை கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக நீடித்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

உபரி நீர் திறப்பு

நேற்று முன்தினம் வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. பின்னர் நேற்று காலை இது 300 கன அடியாக குறைந்தது. நீர்வரத்து காரணமாக நேற்று மாலை அணை நீர்மட்டம் 44 அடியை எட்டியது.

இதற்கிடையே, மாலையில் மீண்டும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்தானது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணை முழு கொள்ளளவை எப்போது வேண்டுமானாலும் எட்டும் என்பதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரானது திறக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை மற்றும் நீர் வரத்தை பொறுத்து அணையில் இருந்து உபரி நீர் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம். ஆகையால் கோமுகி ஆற்றின் கரையோரத்தில் உள்ள வடக்கனந்தல், கச்சிராயப்பாளையம், செம்பட்டாக்குறிச்சி, அக்கராயப்பாளையம், வெங்கடாம்பேட்டை உள்ளிட்ட கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்தனர்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக அக்டோபர் மாதத்தில் கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டில் முன்கூட்டியே தண்ணீர் உபரி நீராக திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story