குளூர் ஊராட்சி கிராமசபை கூட்டம்: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேச்சு


குளூர் ஊராட்சி கிராமசபை கூட்டம்: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேச்சு
x

குளூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜகோபால் சுன்கரா, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

ஈரோடு

மொடக்குறிச்சி

குளூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜகோபால் சுன்கரா, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

கிராமசபை கூட்டம்

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், குளூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். குளூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ஊரகப்பகுதிகளில் மழைநீரினை சேமிப்பதனை முனைப்புடன் செயல்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட்டு மழைநீர் சேகரிப்பினை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேலும் அனைவரும் மரக்கன்றுகளை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்

ஊரகப் பகுதிகளில் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியினை முழுமையாக தடை செய்தல், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி இல்லாத கிராமங்களை உருவாக்குதலை உறுதி செய்ய வேண்டும்.

முழு ஒத்துழைப்பு

மேலும், அனைத்து வீடுகளிலும் திடக்கழிவுகள் தரம் பிரிப்பதை உறுதி செய்தல், தரம் பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளை மட்டுமே தூய்மை காவலர்கள் சேகரம் செய்தல் மற்றும் திடக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் வழி முறையை மேம்படுத்துதல் வேண்டும். கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக தேவைகள் குறித்த திட்டங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். தங்களின் ஊராட்சி சிறந்த ஊராட்சியாக திகழ்வதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.

விவாதம்

இதைத்தொடர்ந்து கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் திட்ட பணிகள், தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கோரிக்கை மனுக்கள்

இதையடுத்து குளூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்பின்னர் சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில் மொடக்குறிச்சி தொகுதி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி, இணைஇயக்குனர்கள் முருகேசன் (வேளாண்மை), பழனிவேல் (கால்நடை பராமரிப்பு), துணைஇயக்குனர்கள் மரகதமணி (தோட்டக்கலை துறை), உதவி இயக்குனர்கள் சிந்தியா (தோட்டக்கலை), கலைச்செல்வி (வேளா ண்மை), மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மொடக்குறிச்சி ஒன்றியகுழு தலைவர் கணபதி நன்றி கூறினார்.


Next Story