ஆத்தாங்கரை பள்ளிவாசலில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு...!
ஆத்தாங்கரை பள்ளிவாசலில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை திருச்செந்தூர் போலீசார் மீட்டுள்ளனர்.
திருச்செந்தூர்,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரகுமானியபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமிது(வயது 36). இவர் கடையநல்லூரில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக பணியாற்றுகிறார். இவருக்கு நாகூர் மீராள்(26) என்று மனைவியும், முகமதுசபிக்(7) என்ற மகனும், நஜிலா பாத்திமா(2) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 11-ம் தேதி சாகுல் ஹமிது தனக்கு மொட்டை போடுவதற்காக குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆத்தாங்கரை பள்ளிவாசலக்கு சென்றுள்ளார். மொட்டை போட்டு விட்டு இரவு அங்கேயே தங்கியுள்ளார். நேற்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் மீராள் எழுந்து பார்க்கும் போது தனது அருகில் படுத்து தூங்கிய குழந்தை நஜிலா பாத்திமாவை காணவில்லை.
போலீசார் தீவிர விசாரணை
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து கூடங்குளம் போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கூடங்குளம் போலீசார், தகவலை அனைத்து காவல் நிலையங்களுக்கும் தெரிவித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று திருச்செந்தூர்-குலசேகரன்பட்டினம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை எதிர்ப்புறம் கரம்பவிளை விளக்கு பகுதியில் நின்ற இரண்டு கார்களுக்கும் நடுவில் ஒரு குழந்தை இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் திருச்செந்தூர் கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் குழந்தையை கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆத்தாங்கரை பள்ளிவாசலில் கடத்தப்பட்ட குழந்தை நஜிலா பாத்திமா என தெரியவந்தது.
இதையடுத்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் குழந்தையின் பெற்றோர்களை திருச்செந்தூருக்கு அழைத்து வந்தனர். திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.