கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட சினிமா பட வினியோகஸ்தர் சத்தியில் மீட்பு
கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட சினிமா பட வினியோகஸ்தர் சத்தியில் மீட்பு
சத்தியமங்கலம்
கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ் (வயது 36). சினிமா பட வினியோகஸ்தர். இந்த நிலையில் இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சினிமா படம் எடுக்க ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வந்துள்ளார். அப்போது அவருக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலையை சேர்ந்த கரிகாலன், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த கார்த்திகேயன், கொத்தமங்கலத்தை சேர்ந்த சிவசக்தி ஆகியோர் பழக்கமானார்கள். அவர்கள் 3 பேரும் கிருஷ்ண பிரகாசிடம், தாங்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவதாக கூறி பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு ஆண்டாகியும் அவர்களை படத்தில் நடிக்க வைக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் கிருஷ்ண பிரகாஷ் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணா பிரகாஷ் கிருஷ்ணகிரிக்கு சினிமா படம் எடுப்பது தொடர்பாக வந்துள்ளதாக நேற்று தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து 3 பேரும் ஆம்னி வேனில் கிருஷ்ணகிரி சென்று கிருஷ்ண பிரகாசை கடத்திக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். இது குறித்த தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அத்தாணி ரோட்டில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் வேனில் கிருஷ்ண பிரகாசும், அவர்களை கடத்தி வந்த 3 பேரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேனில் இருந்த கிருஷ்ண பிரகாசை மீட்டனர். பின்னர் அவரையும், மற்ற 3 பேரையும் கிருஷ்ணகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.