நீர்நிலைகளை கண்காணித்து மணல் மூட்டைகளுடன் தயாராக இருக்க வேண்டும்
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் நீர்நிலைகளை கண்காணித்து மணல் மூட்டைகளுடன் தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் அறிவுறுத்திவுள்ளார்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அதிகாரிகளுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் புவனகிரி ரம்யா, சிதம்பரம் ஹரிதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கம், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் சுவேதாசுமன் பேசுகையில், புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணியில் மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
புயலால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். உடைப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதனை சரி செய்ய தேவையான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், வட்டார மருத்துவ அலுவலர்கள் அமுதா பெருமாள், சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பாலமுருகன், செல்வி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நன்றி கூறினார்.