கார்த்திகைதீப அகல்விளக்குகள்


கார்த்திகைதீப அகல்விளக்குகள்
x

கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

பெரம்பலூர்

தொழிலை பாதுகாக்க வேண்டும்

பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி முருகேசன்:- எங்கள் குடும்பம் பரம்பரை, பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்து வந்தது. நான் 7 வயதில் இருந்து இந்த தொழிலை செய்து வருகின்றேன். பானை, குழம்பு சட்டி, பூந்தொட்டி, தேநீர் அருந்தும் குவளை, தட்டு, அகல் விளக்குகள் உள்ளிட்டவை சக்கரத்தை பயன்படுத்தி தயாரித்து வருகின்றேன். தற்போது ஏரிகளில் தண்ணீர் இருப்பதால் களிமண் கிடைப்பதில்லை. களிமண்ணுக்கு அதிக தொகை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இந்த தொழிலில் அதிக அளவு வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அரசின் மழைக்கால பராமரிப்பு உதவி தொகையும், நவீன தொழில்நுட்பத்துடன், மாறுபட்ட வேகத்துடன் கூடிய சீலாவில் மின்சக்கரங்களும் வழங்கப்படவில்லை.

ஆனால் மண்பாண்ட தொழில் செய்யாத குடும்பங்கள் அவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது பொதுமக்களிடம் மண்பாண்ட பொருட்களின் மோகமும் முற்றிலும் குறைந்து விட்டது. மண்பாண்ட தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால், அடுத்து வரும் தலைமுறையினர் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு விரும்பம் இல்லாமல் இருக்கின்றனர். கிடைக்கின்ற மற்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் இருப்பினும், தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சிலர் தான் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை மற்றும் மின்சக்கரங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலை நசுங்காமல் பாதுகாக்க தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.

பெரம்பலூரை சேர்ந்த மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி விமலா பொன்னுச்சாமி:- முன்னே போல் தற்போது மண்பாண்ட பொருட்கள் அதிகளவில் விற்பனை ஆகுவதில்லை. தற்போது சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் இந்த பொருட்களை வாங்குகின்றனர். சமீப காலமாக திருக்கார்த்திகை கொண்டாடும் பொதுமக்கள் அகல் விளக்குகளை வாங்காமல், எலக்ட்ரானிக் கடைகளில் விற்கப்படும் சீன விளக்குகள், எலக்ட்ரானிக் அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை வாங்கி கார்த்திகை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இதனால் எங்களை மாதிரி அகல் விளக்குகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

மன இருளை அகற்றுவோம்

பெரம்பலூரை சேர்ந்த இல்லத்தரசி முருகராணி:- தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று திருக்கார்த்திகை. இறைவன் ஒளிப்பிழம்பாய் காட்சியளிக்கும் இத்திருநாளில் மண்ணால் ஆன அகல்விளக்கினை நமது இல்லங்களில் ஏற்றுவது தான் மிகவும் சிறப்பானதாகும். என்னதான் நவீன வசதிகள் பெருகிவிட்டாலும் நமது பாரம்பரிய வழக்கம் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது தான் நன்மையைத்தரும். பஞ்ச பூதங்களில் முதலானது நிலம் அதாவது நம்மைத்தாங்கும் பூமி. மண் விளக்கில் தீபமேற்றி வழிபடுவது நமது பூமித்தாயை வணங்குவதாகும். நவீன காலத்தில் அகல் விளக்கு செய்பவர்கள் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றவும் பாரம்பரியத்தை காக்கவும் அகல் விளக்கு ஏற்றுவோம். மண் விளக்கு ஏற்றி மன இருளை அகற்றுவோம்.

பெரம்பலூர் பாலையூரை சேர்ந்த இல்லத்தரசி கவிதா:- கார்த்திகை தீப திருவிழா இந்துக்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாகும். கார்த்திகை தீபத்தன்று அனைத்து வீடுகளிலும், மாடங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வருகிறோம். குறிப்பாக கிராம புறங்களில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வருகிறோம். தீபம் ஏற்றக்கூடிய விளக்குக்கு எங்கள் வயலில் விளைந்த பருத்தி பஞ்சு பயன்படுத்தி திரி திரித்து, கடலை, எள், ஆமணக்கு, தேங்காய் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணைகளைப் பயன்படுத்தி விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறோம். கிராமப்புறங்களில் பெரும்பாலும் மெழுகுவர்த்தி, எலக்ட்ரானிக் விளக்கு ஆகியவற்றை பயன்படுத்துவது கிடையாது. விவசாயிகள் எப்படி விவசாயம் செய்து பிழைக்கிறோமோ அதுபோல் மண்பாண்ட தொழிலாளர்களின் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொதுமக்கள் அகல் விளக்கினை வாங்கி தீபம் ஏற்றி வழிபட்டால்தான் பழமை மாறாமல் மங்களகரமாகவும், லட்சுமி கடாட்ஷம் நிறைந்தும் விளங்கும்.


Next Story