கார்த்திகை தீப அகல்விளக்குகள்


கார்த்திகை தீபத் திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது

விருதுநகர்

கார்த்திகை தீபத் திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.8-ந் தேதி வரை3 நாட்கள் தமிழக இல்லங்களில்எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

அகல் விளக்குகள்

மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் முளைத்திருக்கின்றன.

விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ரெடிமேடு விளக்குகள்

இவை ஒருபுறம் இருக்க தற்போது மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன.

இதனால் களிமண்ணால் செய்யப்படும் பாரம்பரிய அகல்விளக்குகள் அவைகளோடு போட்டியிட முடியாமல் மெல்ல மெல்ல அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் பாத்திரங்கள், அலங்காரப்பொருட்களில் உலோகங்களின் ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருந்தவர்கள் கட்டுமானம் போன்ற இதர வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

மக்கள் ஆதரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவை சேர்ந்த மண் பானை தயாரிப்பாளர் பெருமாள் கூறியதாவது:-

நாங்கள் பானைகள், அகல் விளக்குகள், மண் உண்டியல் என பல்வேறு கைவினைப்பொருள்களை உற்பத்தி செய்து வருகிறோம். இத்தொழிலை ஊக்குவித்து அரசு விற்பனைக்கு ஆர்வம் காட்டி அதன் மூலம் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகல்விளக்கு மீது நாட்டம் கொண்ட மக்கள் மட்டுமே தொடர்ந்து ஆதரவு அளிக்கிறார்கள். மற்றவர்கள் ெமழுகுவர்த்தி, அலங்கார விளக்குகளுக்கு மாறி விட்டனர். ஒரு சிலர் வீட்டில் அகல் விளக்கு ஏற்றுவதை கைவிட்டு அலங்கார விளக்குகளை வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். இதனால் எண்ணற்ற தொழிலாளர்களில் வாழ்வில் ஒளி வீச முடியாத நிலை உள்ளது.

ரேஷன் கடைகள்

பெருமாள் பிச்சை:- தங்க விளக்கு, வெள்ளி விளக்கு, எவர் சில்வர் விளக்கு, பித்தளை விளக்கு, கேரளா விளக்கு என எத்தனை விளக்குகள் வந்தாலும் அகல் விளக்குக்கு ஈடு எதுவும் ஆகாது. மண்பாண்ட தொழிலுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.

அகல் விளக்குகளை கூட்டுறவு ரேஷன் கடைகள், கோ ஆப்-டெக்ஸ் ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். மண்விளக்கினை அனைவரும் ஏற்றுவதன் மூலம் எண்ணற்ற தொழிலாளர்களுக்கு வாழ்க்கை கிடைக்கும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு எந்த நேரமும் தட்டுப்பாடின்றி மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எண்ணிக்கை குறைந்தது

அகல்விளக்கு தயாரிக்கும் அழகம்மாள்:- எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக கார்த்திகை அகல் விளக்கும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அகல் விளக்குகள் 8 விதமாக தயாரிக்கிறோம். சிறிய விளக்கு, நடுத்தர விளக்கு, வரி விளக்கு, மண் குத்து விளக்கு, கூண்டு விளக்கு, விநாயகர் விளக்கு, காமாட்சி விளக்கு, மயில் விளக்கு ஆகிய விளக்குகளை தயாரித்து வருகிறோம்.

கடந்த காலங்களில் மண் அதிகமாக கிடைத்தது. அதன் மூலம் கார்த்திகை விளக்குகள் அதிக அளவு தயாரித்து விற்பனை செய்து வந்தோம். தற்போது மண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மண் விளக்குகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழில் பாதிப்பு

ராஜபாளையத்தை சேர்ந்த வியாபாரி ராமதிலகம்:-

எங்களது பகுதியில் மண்பானை, கார்த்திகை விளக்கு தயார் செய்து ஒவ்வொரு ஆண்டும் விற்பனை செய்து வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரியமாக செய்யும் மண்சட்டி, விளக்கு தயார் செய்யவும் போதிய பணியாளர்கள் இல்லை. இதனால் வெளியூர்களிலிருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறோம். இதனை தயாரிப்பது தற்போது இலஞ்சி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் இருந்து விளக்குகளை வாங்கி இங்கு வந்து விற்பனை செய்து வருகிறோம். மெழுகுவர்த்தி, அலங்கார விளக்கு ஆகியவற்றின் வருகையால் அகல் விளக்கு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கலர் பெயிண்ட்

மதன்குமார்:-

அகல் விளக்கு வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியூர்களில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விளக்குகளை விற்பனை செய்து வருகிறோம். விலை ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் நிலையில் மண் விளக்கை வாங்கி வந்து அதற்கு கலர் பெயிண்ட் அடித்து விற்பனை செய்து வருகிறோம். சிலர் கார்த்திகை தீப விளக்கை பிளாஸ்டிக் மூலம் தயாரிப்பதை பயன்படுத்தி வருகின்றனர். இதை தவிர்த்து பழமையான நடைமுறையை பயன்படுத்த வேண்டும்.

விருதுநகர் ெரங்கராஜா:-

கார்த்திகை தீபநன்னாளில் இல்லங்களிலும், வணிக நிறுவனங்களிலும், கோவில்களிலும் அகல் தீபம் ஏற்றுவது சிறப்பு நிகழ்வாகும். அகல் தீபம் ஏற்றுவது 10 காமாட்சியம்மன் தீபம் ஏற்றுவதற்கு, 100 குத்து விளக்கு ஏற்றுவதற்கு சமமாகும். அகல் தீபம் ஏற்றும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள். எந்த தெய்வத்திற்கு தீபம் ஏற்றினாலும் அகல்விளக்கில் தீபம் ஏற்றுவது மிகச் சிறந்தது அதற்கு காரணமும் உண்டு. அதாவது ஏழை ஒருவனால் ஐம்பூதங்களை கொண்ட நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தொடர்புடன் களிமண்ணில் நீரை ஊற்றி சூரிய ஒளியில் காய வைத்து காற்றில் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை உருவாக்குகிறான். அதில்தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள். அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழை குடும்பமும் வாழ்வாதாரம் பெறுகிறது.

எனவே கார்த்திகை பரணி தீபம் பலவகைகளிலும் பயன் தரக்கூடியது. விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன் கிடைக்கும். இருமுகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். 3 முகங்கள் ஏற்றினால் புத்திர பாக்கியம் கிட்டும். 4 முகங்கள் ஏற்றினால் செல்வங்கள் சேரும். 5 முகங்கள் ஏற்றினால் சர்வ செல்வங்களும் பெருகும். ஆனால் அகல் விளக்கேற்றினால் மட்டும் இந்த 5 முகங்கள் ஏற்றிய பலன் கிடைக்கும்.


Next Story