காஞ்சீபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
காஞ்சீபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் புகழ்பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்காரம் செய்யப்படும். பின்னர் பொது மக்கள் வழிபட்டு செல்வர். தொடர்ந்து இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
அதை தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் குப்புசாமி கூறுகையில்:-
முதலாம் ஆண்டு ரூபாய் நாணயங்களால் அலங்காரம் செய்தோம். பின்னர் ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம். இந்த ஆண்டு 18-ம் ஆண்டு என்பதால் நண்பர்கள் மூலம் 15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.