ஜே.இ.இ. முதன்மை தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்
ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு மார்ச் 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
சென்னை,
மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளான் ஆகிய இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. ஜே.இ.இ. தேர்வானது ஜே.இ.இ. முதன்மை மற்றும் அன்வான்ஸ்டு தேர்வுகளாக நடத்தப்படுகிறது.
அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான, ஜே.இ.இ. முதன்மை தேர்வின் முதல்கட்ட தேர்வு கடந்த ஜனவரி 24-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 544 மையங்களில், 13 மொழிகளில் நடைபெற்ற இந்த தேர்வை 12 லட்சத்து 25 ஆயிரத்து 529 பேர் எழுதினர்.
இந்த நிலையில், ஜே.இ.இ. முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், https://jeemain.nta.ac.inஎன்ற இணையதளத்தில் வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.