ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர் புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.