வாங்க ஆட்கள் இல்லாததால் அழுகும் பலாப்பழங்கள்


வாங்க ஆட்கள் இல்லாததால் அழுகும் பலாப்பழங்கள்
x

கீரமங்கலம் பகுதியில் வாங்க ஆட்கள் இல்லாததால் பலாப்பழங்கள் அழுகி வருகிறது. இதனால் பலாப்பழங்களை அறுவடை செய்யாமல் மரத்திலேயே விடும் அவலநிலை உள்ளது.

புதுக்கோட்டை

பலாப்பழங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம், சேந்தன்குடி, நகரம், குளமங்கலம், மேற்பனைக்காடு, பெரியாளூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, செரியலூர், மாங்காடு, வடகாடு, அணவயல், புள்ளாண்விடுதி, மறமடக்கி உள்பட சுற்றியுள்ள சுமார் 50- க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பலா மரங்கள் வளர்த்து வருகின்றனர். இப்பகுதி பலாப்பழங்கள் சுவைமிக்கதாக உள்ளதால் மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு நாளும் சுமார் 100 டன் வரை பலாப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அழுகும் நிலை

கடந்த சில வாரங்களாக பலாப்பழங்களின் விற்பனை விலை குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்றுமதியும் குறைந்து வருகிறது. அதாவது மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால் பலாப்பழங்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலாப்பழங்களை அறுவடை செய்யாமல் மரத்திலேயே விடும் அவலநிலை உள்ளது. பலாப்பழங்கள் வாங்க ஆட்கள் இல்லாததால் கடைகளில் பழங்கள் அழுகும் நிலையும் ஏற்பட்டுள்து.

இதுகுறித்து விவசாயிகள், வியாபாரிகள் கூறுகையில், பலாப்பழங்கள் உற்பத்தி தொடங்கும் போது ஒரு கிலோ ரூ.30 வரை விற்பனை ஆனது. பிறகு உற்பத்தி அதிகமான போது ஒரு கிலோ ரூ.15, ரூ.20-க்கு விற்பனை ஆனது. தற்போது உற்பத்தி குறையத் தொடங்கும் போது மாம்பழங்களின் வரத்தும் அதிகரித்துள்ளதால் விலை மிகவும் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகளின் மரங்களில் பழுத்த பழங்களை கூட அறுவடை செய்யாமல் மரங்களிலேயே அழுகி வருகிறது. விற்பனைக்கு கமிஷன் கடைகளுக்கு வந்த பழங்களும் ஏற்றுமதி செய்ய முடியாமல் அழுகி வருகிறது, என்றனர்.


Next Story