தாளவாடி வனப்பகுதி ரோட்டோரம் கர்நாடக பலாப்பழங்கள் விற்பனை- ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் வாகன ஓட்டிகள்
தாளவாடி வனப்பகுதி ரோட்டோரம் விற்கப்படும் கர்நாடக பலாப்பழங்களை வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கிறார்கள்.
தாளவாடி
தாளவாடி வனப்பகுதி ரோட்டோரம் விற்கப்படும் கர்நாடக பலாப்பழங்களை வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கிறார்கள்.
கர்நாடக பலாப்பழம்
கர்நாடகா மாநிலம் மைசூர், சாம்ராஜ் நகர், குண்டல் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலா பழ மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது கர்நாடகா மாநிலத்தில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து பலாப்பழங்கள் அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட பலா பழங்கள் தமிழக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடி பகுதிகளுக்கு வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். அதன்பின்னர் வனப்பகுதி ரோட்டோரங்களில் கூடாரம் மற்றும் கடைகள் அமைத்து பலா பழங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
ஒரு கிலோ ரூ.30
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகனங்கள், கார்களில் வருபவர்கள் பலாப்பழங்களை ஆர்வமுடன் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். இதேபோல் கடம்பூர், திம்பம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வேன் மூலம் பலாப்பழங்களை கொண்டுசென்றும் விற்கிறார்கள்.
இது குறித்து பலாப்பழ வியாபாரி ஒருவர் கூறும்போது, 'கர்நாடக மாநிலத்தில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. அங்கிருந்து வாகனங்களில் பலாப்பழங்களை கொண்டு வந்து தற்காலிக கடைகள் அமைத்து விற்கிறோம். வனப்பகுதியாக இருப்பதால் மாலை 5 மணிக்கு மேல் கடையை காலிசெய்துவிட்டு சென்றுவிடுவோம். ஒரு கிலோ பழம் ரூ.30-க்கு விற்கிறோம்' என்றார்.