உலக மனநல தினத்தையொட்டி விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வெளியீடு: மனதை இருக்கமாக வைக்காமல் எளிதாக வைத்திருந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் பேச்சு
மனதை இருக்கமாக வைக்காமல் எளிதாக வைத்திருந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று உலக மன நல தினத்தையொட்டி விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை வெளியிட்டு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற அவர், 8 மனுக்களை பெற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடன் உதவி, ஏரி, குளம் தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 313 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நலத்திட்ட உதவிகள்
மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.12 லட்சத்து 87 ஆயிரத்து 300 மதிப்பீட்டிலான நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
தொடர்ந்து உலக மன நல தினத்தை முன்னிட்டு தேசிய நல வாழ்வு திட்டம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மன நலத்திட்ட சேவைகள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மன நல சிகிச்சையும், தொடர் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. தீவிரமான மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆயிரம் ரூபாயும், பிறப்பிலேயே மூளை வளர்ச்சி குன்றி தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-ம் வழங்கப்பட்டு வருகிறது.
எளிதில் குணப்படுத்தலாம்
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மனதை இருக்கமாக வைத்துக்கொள்ளாமல் எப்போதும் ஆரோக்கியமாகவும், எளிதாகவும் வைத்துக்கொண்டால் மன அழுத்தத்தில்இருந்து விடுபடலாம். மன நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான மன நல மருத்துவரின் ஆலோசனையின்படி சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணப்படுத்தலாம் என கூறினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட மனநல அலுவலர் பிரவீனா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.