கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா? ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து


கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?  ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்தில் கைகொடுத்த கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகள் பயன் தருவதாய் உள்ளதா? என்பது குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தேனி

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டதுதான் கல்வி தொலைக்காட்சி. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி, இந்த கல்வி தொலைக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

முதலில் சில குறிப்பிட்ட பாடங்கள் மாணவ-மாணவிகளுக்கு வீடியோவாக பதிவிடப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில், கல்வி தொலைக்காட்சி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேருதவியாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைன் வாயிலாக தங்களது கற்றலை வலுப்படுத்தி வந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு கல்வி தொலைக்காட்சி தான். அதன் வாயிலாகவும், கல்வித்துறையின் சீரிய முயற்சியாலும் மாணவர்களின் கற்றல் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தது.

செயல்பாடுகளில் மாற்றம்

ஆரம்பத்தில் 2 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் ஆசிரியர்களை கொண்டு வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்டன. சனிக்கிழமைகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பயிற்சி வினாக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் இசை, மனநல ஆலோசனை உள்பட துணைக்கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் பயன் அடைந்ததையும் பார்க்க முடிந்தது.

தொலைக்காட்சி வாயிலாக மட்டுமல்ல, அதில் ஒளிபரப்பாகும் வீடியோக்கள் கல்வித் தொலைக்காட்சி யூ-டியூப் வாயிலாக அதற்கு மறுநாள் பார்க்கும் வகையில் பதிவேற்றமும் செய்யப்பட்டன. கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காலம் வரை கல்வி தொலைக்காட்சி மூலம் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அதன்பின்னர், நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதும், கல்வி தொலைக்காட்சியின் செயல்பாடுகளில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டது.

பயனுள்ளதாக உள்ளதா?

அதன்படி, தற்போது கல்வி தொலைக்காட்சியில் கொரோனா காலத்தில் வெளியிடப்பட்டது போன்ற பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியிடுவது குறைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மாற்றாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடர்பான வீடியோக்களும், காலை மற்றும் மாலையில் வேலைவாய்ப்பு தொடர்பான வீடியோக்களும், இதை தவிர மற்ற நேரங்களில் பாடங்கள் குறித்த வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதுதான் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகளாக இருக்கிறது. இருப்பினும், கல்வி தொலைக்காட்சி கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? அதை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

மிகவும் எளிமை

தாரணி (அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி, கோட்டூர்) :- கல்வி தொலைக்காட்சியில் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் அட்டவணைப்படுத்தி பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது அது மாற்றப்பட்டு தொடக்க, நடுநிலை வகுப்புகளுக்கான பாடங்கள் அதிகம் நடத்தப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. நாங்கள் தொலைக்காட்சியில் பார்க்க முடியாமல் தவற விட்ட பாடங்களை யூடியூப் மூலம் பார்த்து வந்தோம். ஸ்மார்ட் போன் வசதி இல்லாத மாணவ, மாணவிகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருக்காது. கல்வி தொலைக்காட்சி மூலம் பார்க்கும் போது அதில் பாடங்கள் புரியாத நிலையில், சந்தேகம் கேட்பதற்கும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால் சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற வசதியாக உள்ளது. ஆசிரியர்களும் வகுப்பறையில் சிறப்பாக பாடம் நடத்துகின்றனர்

ஐஸ்வர்யா (அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி, கோட்டூர்) :-பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை வீட்டில் கல்வி தொலைக்காட்சியில் பார்க்கும் போது அது மிகவும் எளிமையாக இருக்கிறது. கொரோனா கால கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் கல்வி தொலைக்காட்சி வாயிலாக தான் பாடம் படித்து வந்தேன். முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பிறகு நல்ல புரிதல் ஏற்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் கல்வி தொலைக்காட்சியை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அது பயனுள்ளதாக உள்ளது.

பார்க்க நேரமில்லை

விஷ்ணு (அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், கடமலைக்குண்டு) :- கொரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சியை பார்த்தேன். பள்ளி திறக்கப்பட்ட பிறகு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்துவதால் கல்வி தொலைக்காட்சியை பார்ப்பது இல்லை. பள்ளியில் கற்றுக் கொடுப்பதை வீட்டில் சென்று படிக்கவும், அன்றாட வீட்டுப் பாடம் செய்வதற்கும் நேரம் சரியாக உள்ளது. விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குக்காக கொஞ்சம் நேரம் டி.வி. பார்ப்பேன். கல்வித் தொலைக்காட்சியை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.

ஹரிஹரன் (அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், கடமலைக்குண்டு) :- பள்ளியில் தினமும் வீட்டுப்பாடம் கொடுக்கிறார்கள். சனி, ஞாயிறு என்றாலும் அதற்கும் சேர்த்து வீட்டுப் பாடம் கொடுக்கப்படுகிறது. அதை செய்வதற்கே நேரம் சரியாய் போகிறது. கொரோனா கால கட்டத்தில் கல்வி தொலைக்காட்சியை பார்த்தேன். சக மாணவர்கள் சிலர் கொரோனா கால கட்டத்திலும் கல்வி தொலைக்காட்சியை பார்க்காமல் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் பள்ளி திறந்த போது கற்றலில் பின்தங்கினர். கல்வி தொலைக்காட்சியை தினமும் பார்த்து படித்து இருந்தால் கற்றல் பின்னடைவு ஏற்படாமல் தடுத்து இருக்கலாம்.

பள்ளிக்கு வர முடியாதவர்கள்

செல்வம் (ஆசிரியர், கடமலைக்குண்டு) :- கல்வி தொலைக்காட்சி கொரோனா கால கட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. மாணவிகள் வீடுகளில் இருந்ததால் கல்வி தொலைக்காட்சியை தினமும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மாணவர்கள் பெரும்பாலும் நண்பர்களோடு விளையாடச் சென்று விடுவதால் அவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்கத் தவறுவதால் கற்றலில் பின்தங்கியதை பார்க்க முடிந்தது.

நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதால் கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். கொரோனாவுக்கு பிறகு கல்வித்துறையில் புதிய திட்டங்கள் நிறைய வந்துள்ளது. ஆசிரியர்கள் ஆர்வமுடன் பாடம் நடத்துகின்றனர். தினமும் வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டும். அவற்றை தினமும் திருத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் செய்யவே நேரம் சரியாக இருப்பதாக கூறுகின்றனர். இதனால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் கல்வி தொலைக்காட்சியை பார்ப்பது இல்லை என்றே தெரிகிறது. என்ன இருந்தாலும் நேரடி வகுப்பு தான் சிறந்தது. அதே நேரத்தில் பள்ளிக்கு வர முடியாத மாணவ, மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி பயனுள்ளதாக உள்ளது.

ஆனந்தி (ஆசிரியை, கோட்டூர்) :- கல்வி தொலைக்காட்சி மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆங்கில வழியில் கற்றுத் தருவதை தமிழில் வழியிலும் அதிகம் கற்றுத் தந்தால் பின்தங்கிய கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு இன்னும் பயனுள்ளதாக அமையும். பாடங்களை கதை வடிவில் கற்பிப்பதால் மிகவும் எளிமையான புரிதலை கொடுக்கும்.

பாடங்கள் நடத்துவதோடு, அதற்கான படங்கள், வீடியோக்களை வைத்து கற்றுக் கொடுப்பது மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும். சில மாணவர்கள் தங்களின் பெற்றோர்கள் வீடுகளில் நாடக தொடர்கள் பார்ப்பதாலும், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் குழந்தைகளுக்கான சேனல்களை அதிகம் பார்ப்பதாலும் கல்வித் தொலைக்காட்சியை அடிக்கடி பார்க்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்களின் பொழுதுபோக்கு அம்சங்களை விடவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு கல்வி முக்கியம் என்ற விழிப்புணர்வுடன் இருப்பதும் அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story