சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?


சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?
x

பலருடைய செல்போன்களிலும் அடிக்கடி கேட்கும் உரையாடல் இதுதான். ‘பேங்க் மேனேஜர் பேசுறேன் சார், உங்கள் ஏ.டி.எம். கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், ஏன் இணைக்காமல் இருக்கிறீங்க?, ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும் சார். ஏ.டி.எம். கார்டை கையில் எடுங்கள். என்ன பேங்க் கார்டு வைக்கிறீங்க, ஸ்டேட் பேங்கா, இந்தியன் பேங்கா, கனரா பேங்கா?. என்பார்கள்.

அரியலூர்


சந்தேகமடைந்த நபர் நீங்கள் எந்த பேங்க் மேனேஜர் சார் பேசுறீங்க? ...ஸ்டேட் பேங்கில் இருந்து பேசுகிறேன், உங்கள் ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும், கார்டு மேலே உள்ள 16 நம்பரை மெதுவா சொல்லுங்க சார்' என்பார்.

இணைய மோசடி

வடமாநிலங்களை சேர்ந்த சிலர் தமிழகத்தில் உள்ள செல்போன் எண்களில் இதுபோன்று பேசி பணத்தை திருடி விடுகின்றனர். இணையதளம் மூலம் மோசடி பேர் வழிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று, அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஏதாவது ஆசை வார்த்தைகளை பேசி, செல்போனின் உள்ளே புகுந்துவிட்டால், அதை வைத்து வங்கிக்கணக்கின் உள்ளே போய் பணத்தை அள்ளிவிடுகிறார்கள்.

இதுபோன்று பல வடிவங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் கொரோனா காலத்தில் அதிகரித்து காணப்பட்டது. தற்போதும் இக்குற்றங்கள் நாடெங்கிலும் அதிகரித்தே காணப்படுகிறது. தமிழகம் இந்த குற்ற அளவுகளில் தற்போது 12-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பொது முடக்க காலமான 2020-ம் ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில், 11 ஆயிரத்து 97 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கிரிப்டோ மோசடியும் தமிழகத்தில் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியாக இணையவழி மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. மக்களும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

இதுபற்றி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் கூறிய விவரம் வருமாறு:-

கண்காணிக்க வேண்டும்

தா.பழூர் பகுதியை சேர்ந்த உயர்நீதிமன்ற வக்கீல் இளையராஜா:- செல்போன்கள் மூலம் நமது வங்கி மற்றும் ஏ.டி.எம். கார்டு தகவல்களை கேட்கும் பொழுது நிச்சயமாக போன் மூலம் தகவல்களை தருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆசை வார்த்தை கூறி, இலவசங்கள், பரிசுகள், அன்பளிப்புகள் என்கிற பெயரில் வெளியிடப்படும் இணையவழி லிங்குகளை தேவையில்லாமல் தொட்டு பொதுமக்கள் ஏமாந்து விடுகிறார்கள். இணைய வழி குற்றங்களை செய்பவர்கள் தினமும் புதிது புதிதாக யோசித்து தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளார்கள். அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நாட்டின் சைபர் குற்றப்பிரிவு பல வருடங்கள் பின் தங்கிய தொழில்நுட்பங்களை கையாண்டு வருகிறது. ஒவ்வொரு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் தங்கள் வங்கி பயனாளர்களை காக்கும் வகையில் பொருளாதார சைபர் குற்றங்களை கண்காணிக்கும் வகையில் உயர்ந்த சைபர் குற்ற தொழில்நுட்ப அறிவு கொண்ட வல்லுனர்களை பணியில் அமர்த்தி அனைத்து சர்வர்களையும் கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு வங்கி கணக்கில் இருந்து சைபர் குற்றம் மூலம் பணம் களவாடப்பட்டால் எந்த வங்கி கணக்கிலிருந்து எந்த வங்கி கணக்கிற்கு சென்றது என்பதை கண்டறிந்து உடனடியாக அதனை சரி செய்து வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் தொழில்நுட்பம் உயர்ந்து இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். சைபர் குற்றங்களில் தங்களது பொருளாதாரத்தை இழந்தவர்கள் அல்லது தங்களது ரகசிய ஆவணங்களை இழந்தவர்கள் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களது சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் இணையவழி குற்றங்கள் குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தனி புகார் எண்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் மனோ பாரதி:- இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. அதே நேரத்தில் சில தீய விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று வங்கியில் இருந்து அழைப்பதாக கூறிவரும் அழைப்புகள். இது சம்பந்தமாக அரசு சார்பிலும், வங்கிகள் சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம்கள் நடத்த வேண்டும் அல்லது காணொலி காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் இது சம்பந்தமான புகார்கள் அளிக்க இதற்கென்று தனி புகார் எண் ஒன்றையும் அரசு சார்பிலோ அல்லது சம்பந்தப்பட்ட வங்கிகள் சார்பிலோ மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சாமானிய மக்களின் பணத்தை காக்க வேண்டிய கடமை அரசுக்கும், வங்கிகளுக்கும் உள்ளது.

அளவிற்கு மிஞ்சிய ஆசை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த ஜெகநாதன்:- "குறுக்குவழியில் வாழ்வு தேடும் குருட்டு உலகமடா இதில் கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா" என்ற பாடலுக்கு ஏற்ப டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்ற போர்வையில் சமூக விரோத கூட்டங்கள் நம்மை ஏமாற்றும் காலமாகிவிட்டது. வங்கிகளில் கணக்கு தொடங்கும்போது நமது அடையாள அட்டைகளை வழங்குகிறோம். இதே முறையை பின்பற்றி செல்போன் எண் வாங்கவும், தனியாரிடம் கடன் வாங்கவும், தவணை தொகை கட்டவேண்டி ஏ.டி.எம். கார்டு எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களையும் தருகிறோம். இதன் விளைவு பின்நாளில் ஒரு தனியார் ஏஜென்டிடம் நமது விவரங்களை இந்த நிறுவனங்கள் ஒப்படைக்கும்போது சில சமூக விரோத கும்பலிடம் நமது வங்கியின் வரவு-செலவு விவரங்கள் கிடைத்துவிடுகிறது. இங்குதான் நமக்கு பிரச்சினையே ஆரம்பம். ஒருமுனையில் நமது விவரங்களை சேகரித்து வைத்துக்கொண்டு நம்மை பற்றிய முழுவிவரத்தையும் சொல்லி உங்கள் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ஆதார், பேன்கார்டு எண் என்று கேட்க நாமும் வெள்ளந்தியாக சொல்ல அடுத்த நிமிடமே நமது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது. அரசும், போலீசாரும் எவ்வளவோ விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் மக்கள் தங்களது அறியாமையாலும் அளவிற்கு மிஞ்சிய ஆசையாலும் மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டி உள்ளது.

இந்த நிலைமாற வேண்டுமாயின் முதலில் யார் கடன் கொடுக்க முன்வந்தாலும் சிந்திக்க வேண்டும். இன்று பல நிதிநிறுவனங்கள் கவர்ச்சிகரமாக கூடுதல் வட்டி தருகிறோம். தங்க நாணயம் பரிசாக தருகிறோம். உங்களது பெயரில் வீட்டுமனை பதிவு செய்து தருகிறோம் என்று விளம்பரம் செய்து ஏமாற்றி வருகிறார்கள். பொதுமக்களே எந்த சூழ்நிலையிலும் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தைவிட நன்மை செய்ய முடியாது. எனவே செல்போன் மூலம் நமது வங்கி சார்ந்த விவரம் மட்டுமல்ல நம்மை பற்றிய விவரங்களை தெரிவிப்பதையும் தவிர்க்கவும். சைபர் குற்றங்களை தடுக்க நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த வங்கியும் நமது வங்கி விவரங்களை போனில் கேட்கமாட்டார்கள் என்பதை தெளிவாக புரிந்துகொண்டு சில மணிநேரம் அல்லது சில நாட்கள் ஆனாலும் வங்கிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் நமது விவரங்களை சொல்லி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே சிறந்தது.

தடுக்கும் வசதி

வயலப்பாடியை சேர்ந்த தினேஷ்குமார்:- 2 தினங்களுக்கு ஒரு முறையாவது தவறாமல் கம்பெனி அழைப்புகள் வருகிறது. அதுவும் நாம் அவசர வேலையாக வாகனம் ஓட்டி செல்லும்போது அல்லது முக்கிய வேலையாக இருக்கும் போது அந்த அழைப்பு வரும். யார்? என்று பார்த்தால் அது தவறாமல் கம்பெனி அழைப்பாகவே இருக்கும். தெரியாமல் அழைப்பை எடுத்து பேசினால் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளது. பரிசாக செல்போன், தங்க நாணயம் விழுந்துள்ளது என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். பத்தாயிரம் ரூபாய் பொருளை ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றும் கூறுகின்றனர். இதில் 2 விதமாக ஏமாற்றுகிறார்கள். அதில் உங்கள் வங்கி கணக்கு எண், ஓ.டி.பி. கேட்டு பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்கின்றனர். தரமற்ற பொருளை அனுப்பியும் ஏமாற்றி விடுகிறார்கள். நாமும் ஏமாந்து உள்ளோம். இதுபோன்ற செயல் இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளது. ஏமாற்றுபவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு ஏன் தடுக்கக்கூடாது. மக்கள் மேல் ஏன் குற்றங்கள் சொல்ல வேண்டும். ஏமாற்றுவதை தடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும். ஏமாந்த பின்னர் விழிப்புணர்வை கூறுவதில் எந்த பயனும் இல்லை. தேவையில்லாத இத்தகைய அலைபேசி அழைப்பினால் மன உளைச்சல் ஏற்படுகிறது.

மேலும் படிக்காத பாமர மக்கள் தங்களது பணத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. இனிமேல் தயாரிக்கும் அனைத்து அலைபேசியிலும் இத்தகைய அழைப்பினை தடுக்கும் வசதி செய்தால் அனைவரும் பயனடைவர்.

வங்கிகளின் கடமை

காரைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி ப்ரீத்தி:- இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வங்கிகளில் நேரடியாக வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனை செய்து வந்த காலங்களில் இது போன்ற இணைய வழி ஏமாற்றுதல்கள் நடைபெற்றது இல்லை. ஆனால் தொழில்நுட்பம் வளர வளர இணைய வழி பொருளாதார குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. வங்கிகளிடத்தில் இதனை சரியாக கையாள்வதற்கான செயல் திட்டங்கள் இல்லை. வாடிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டியது வங்கிகளின் கடமை. வாடிக்கையாளர்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு இணையம் மூலம் வாடிக்கையாளர் ஏமாற்றப்படாமல் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

24 மணி நேரத்திற்குள்...

பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், தற்போது செல்போனில் டெலிகிராம் ஆப் மூலம் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. டெலிகிராமில் லிங்க் மூலம் ஏதாவது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அந்த டாஸ்க்கை வெல்பவர்களுக்கு முதலில் குறைந்த அளவு பணம் அனுப்பப்பட்டு அவர்களை பணம் சம்பாதிக்க ஆசையை தூண்டுகிறார்கள். அதனை தொடர்ந்து கொடுக்கப்படும் டாஸ்க்கை யாராலும் வெல்ல முடியாததால் அதிக அளவு பணத்தை இழக்கின்றனர். சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி பணம் அனுப்பி வைக்க சொன்னாலோ, பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், ஆன்லைன் ரம்மி, லோன் ஆப் போன்றவற்றில் ஆசை வார்த்தைகளை கூறினாலும், அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் இணையவழி மூலம் பண மோசடி புகார்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரத்திற்குள் "1930" என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும், என்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story