மத்திய அரசு மீது தி.மு.க.விற்கு பயம் வந்து விட்டது


மத்திய அரசு மீது தி.மு.க.விற்கு பயம் வந்து விட்டது
x

மத்திய அரசு மீது தி.மு.க.விற்கு பயம் வந்து விட்டது என்று செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை

மத்திய அரசு மீது தி.மு.க.விற்கு பயம் வந்து விட்டது என்று செல்லூர் ராஜூ கூறினார்.

பேட்டி

மதுரை மாநகரில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி, மதுரை மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாக செயல்படுகிறது. அதற்கு எடுத்துகாட்டாக தி.மு.க., பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மற்றும் தினகரன் கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். ஆளும் தி.மு.க.வின் செயல்பாடுகள் சரியில்லை. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், தி.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். மது ஆலைகளை மூடுவோம், நீட் தேர்வு ரத்து செய்வோம், பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 என்று தி.மு.க.வின் உதயநிதியும், கனிமொழியும் தேர்தல் நேரத்தில் கூறினர். அதனை நம்பி பெண்கள் வாக்களித்தனர். ஆனால் அவர்களை எல்லாம் தி.மு.க. ஏமாற்றி விட்டது. மழை வெள்ள பாதிப்பை இந்த அரசு சரியாக கையாளவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு முதல் எங்கள் ஆட்சியில் சுமார் 6 முறை முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினோம். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கேரள அரசுக்கு அடிபணிந்து விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம், தமிழக உரிமையை இழந்து விடுவார்கள். தற்போது முல்லை பெரியாறு அணை உரிமையை இழந்து வருகிறோமா என்று விவசாயிகள் எண்ணத்தொடங்கி விட்டனர்.

அதிக கமிஷன்

பால், தயிருக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி போட்டால், தி.மு.க. அரசு 20 சதவீத விலையை ஏற்றுகிறார்கள். ஜி.எஸ்.டி பெயரை சொல்லி தி.மு.க. விலையை அதிகரிக்கிறார்கள். தி.மு.க.வின் முகத்திரையை நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாரமான் தோலுரித்து காட்டி விட்டார். தமிழக அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தி விடுவார்கள் என்று தி.மு.க. அரசு பயப்பட தொடங்கி விட்டது. இப்போது மத்திய அரசு என்றால் தி.மு.க.விற்கு பயம் தான். அதனால் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் நல்ல வரவேற்பு கொடுத்தார். ஒன்றிய பிரதமர் என்று சொன்ன தி.மு.க. இப்போது இந்திய பிரதமர் என்று சொல்ல தொடங்கி விட்டது.

தமிழக அமைச்சர் கமிஷன் வாங்குவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். அதனை தி.மு.க.வினரே சொல்ல தொடங்கி விட்டனர். அவர் அதிக கமிஷன் கேட்டதால், மதுரை மாநகராட்சியில் தெரு விளக்கு டெண்டர் இன்னும் விடப்படாமல் உள்ளது. எனவே அந்த அமைச்சரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக தெரு விளக்கு டெண்டரை மாநகராட்சி இறுதி செய்ய வேண்டும். முக்கிய துறையை கையில் வைத்திருக்கும் மதுரை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மதுரைக்கு அதிக திட்டங்களை கொண்டு வர முதல்-அமைச்சருக்கு அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story