அசலை செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யும் திட்டம்
அசலை செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாட்கோ மூலம் தேசிய ஆதிதிராவிடர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் கடன் உதவி திட்டத்தின் கீழ் 1990-1991 முதல் 2011-2012-ம் ஆண்டு வரை கடன் உதவி பெற்றவர்கள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். இதில் கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்து கொள்ளும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளரால் வழங்கப்படும். இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.