புதிய பஸ் நிலைய பணிகளை 20 நாட்களுக்குள் முடிக்க அறிவுறுத்தல்
வேலூர் புதிய பஸ் நிலைய பணிகளை 20 நாட்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர்
வேலூர் புதிய பஸ் நிலைய பணிகளை 20 நாட்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
புதிய பஸ் நிலையம்
வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 75 பஸ்கள் நிறுத்தும் வகையில் வணிக வளாகம், கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் புதிய பஸ் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது முடிக்கப்பட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
20 நாட்களுக்குள்...
புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் 20 நாட்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும். இந்த பஸ் நிலையத்தில் அனைத்து புறநகர் பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பழைய பஸ் நிலையம் தொடர்பாக கவுன்சில் கூட்டம் முடிவெடுக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு போதுமான வகையில் புதிய பஸ் நிலையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில் தேவைப்பட்டால் கூடுதல் நிலம் கையகப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பஸ் நிலையத்துக்கு கேட்கப்பட்டுள்ளது.
அவை விரைவில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில் உள்ள தனிநபர் இடத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பஸ் நிலையத்துக்குள் எந்தெந்த இடத்தில் பஸ்கள் நிறுத்த வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். வெளிமாவட்டம் போன்ற தொலைதூரத்தில் இருந்து வரும் பஸ்கள் நிறுத்த இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.